Monday, July 21, 2014

கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.

அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 10 மணிக்கு எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும். ஜோலி கிடந்தது. அன்று பப்லுவிற்கு விடுமுறை. ரஹானேவின் அட்டகாச பேட்டிங் ஹைலைட்ஸ் பார்க்கவிடாமல் சாராவையோ டோராவையோ வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். மணி 9.30. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும்10 மணிக்கு செல்ல முடியாது. இருந்தாலும் ரஹானேவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சண்டை போட்டு இரண்டு பவுண்டரிகள் பார்த்தேன். லேட்டாயிடுச்சா என்று பரிகசித்தான் பப்லு. 10 மணிக்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து) பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..
ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
பப்லு. மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். யமஹாலாம் கந்துவட்டியை விட ஸ்பீடானது. வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்
கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்
பப்லுவை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பைக்ல அஞ்சு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..
குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.
தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.
பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்
மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.
3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
கடைசி சிக்னல். இதைத் கடந்துவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம். ஷார்ப்பாக ”ரெட்”சிக்னல் விழுந்தது. சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். போஸ்டரில் அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல. அதுக்கெல்லாம் நேரமில்லை. புதிய வரலாறு படைக்கப் போகும் நேரமது. தல போஸ்டர் ஒட்டியிருந்த சுவரோரமாக லாவகமாக நுழைந்து சிக்னலை கடந்தேன். நேரம் 9.58
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது
மூச்சிறைக்க ஓடி வந்து அலுவலக விளக்குகளை எரிய விட்டேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என தமிழனைப் போல எல்லா நிறங்களிலும் விளக்குகள் எரிந்தன. லேண்ட்லைனில் இருந்து வீட்டிற்கு அழைத்தேன். லேண்ட்லைனில் சிகப்பு நிறம்.
சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா
அம்மாதான் எடுத்தார்கள். ஏம்மா எனக்கு சிவான்னு பேர் வைக்கல என்றேன்.அதெல்லாம் வீட்டுக்கு வா சொல்றேன் என்றார்கள். இன்னைக்கு நான் வர லேட்டாகும்ன்னு சொன்னேனே.
டேய்.லேப்டாப்ப விட்டுட்டு போயிட்ட. வந்து எடுத்துட்டு போ.
ஷிட். அப்பவே ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே?
ஃபோனும் இங்கதான் இருக்கு.
டொக்.
பொறுமையாக இறங்கி வந்து மெதுவாக ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து ஐபோடை ஆன் செய்தேன்.
ஓ மகசீயா ஓ மகசீயா.. நாக்க முக்க நாக்க.. ஓ ஷக்கலக்கா..ஓ ரண்டக்கா
பின்னால் இருந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஒருவர். என்னை ஒவர்டேக் செய்த போது ஏதோ சொல்லிக் கொண்டே சென்றார். சத்தத்தை குறைத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.
கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.

No comments:

Post a Comment